Home » கன்னியாகுமரி செய்திகள் » இரணியல் அருகே சொத்தை எழுதி தரமறுத்த தாயை கொன்ற மகன் கைது

இரணியல் அருகே சொத்தை எழுதி தரமறுத்த தாயை கொன்ற மகன் கைது

612014_nglpag13nlseena

இரணியல், ஜன.6-

இரணியல் அருகே சொத்தை எழுதிக்கொடுக்க மறுத்ததால் தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தாய் கொலை

இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு சுண்டவிளையை சேர்ந்தவர் அழகியநாடார். இவரது மனைவி கனகம்மாள் (வயது 70). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கனகம்மாள் பெயரில் அதே பகுதியில் 28 சென்ட் நிலம் உள்ளது.

அந்த நிலத்தை தனது பெயரில் எழுதித்தருமாறு அவரது மகன் நெல்சன் கேட்டுவந்ததாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவும் சொத்து விஷயமாக தனது தாயார் கனகம்மாளிடம் நெல்சன் பேசியதாக தெரிகிறது. அப்போது சொத்தை தற்போது யாருக்கும் எழுதிக்கொடுக்க மாட்டேன் என்று கனகம்மாள் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நெல்சன் அங்கிருந்த உருட்டுக்கட்டை மற்றும் இரும்புக்கம்பியால் கனகம்மாளை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கனகம்மாள் அங்கேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கனகம்மாள் பரிதாபமாக இறந்தார்.

மகன் கைது

உடனே மகன் நெல்சன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். நெல்சன் கட்டிட தொழிலாளி ஆவார். அவர் நேற்று மயிலோடு சந்திப்பு வழியாக செல்லும் போது குளச்சல் இன்ஸ்பெக்டர் குருநாதன் அவரை கைது செய்தார்.

கைதான நெல்சனிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தியஉருட்டுக்கட்டை மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில் நெல்சன் கூறியதாவது:-

எனது தாயார் பெயரில் உள்ள சொத்தை எனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டேன். ஆனால் எனது தாயார் சொத்தை எழுதி தரமறுத்து விட்டார். எனது காலத்துக்குபிறகு எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இதனால் எனக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் அவரது தலையை பிடித்து சுவரில் அடித்தேன். பின்னர் உருட்டுக்கட்டை மற்றும்கம்பியால் தாக்கினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இவ்வாறு அவர் போலீசில் கூறியுள்ளார்.