Home » இந்தியா செய்திகள் » இந்திய விஞ்ஞானிகள் இமாலய சாதனை: நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2
Chandrayaan2-goes-up-successfully-places-satellite-in

இந்திய விஞ்ஞானிகள் இமாலய சாதனை: நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக ‘சந்திரயான்-1’ என்ற விண் கலத்தை இஸ்ரோ தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக் கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது.

தொடர்ந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற் காக மற்றொரு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. இதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.978 கோடியாகும்.

பின்னர் அங்கிருந்து அந்த விண்கலம் சென்னை அருகே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வந்தது. இது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஜி.எஸ்.எல்.வி.’ மார்க்-3 ரகத்தில் 14-வது ராக் கெட் ஆகும். இதில் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரையோஜெனிக்’ என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 15-ந் தேதி அதிகாலை 2.53 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் 58 நிமிடங்களுக்கு முன்பாக தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக ராக்கெட் ஏவும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, விண்கலத்தை நேற்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி 20 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு ‘சந்திரயான்-2’ விண்கலத்தை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் 2.43 மணிக்கு விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 43.3 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்த ராக்கெட்டில் 2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டர், 1,471 கிலோ எடைகொண்ட லேண்டர், 27 கிலோ எடை கொண்ட ரோவர் உள்பட 3,877 கிலோ எடை கொண்ட ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

புறப்பட்ட சுமார் 16 நிமிடம் 24 வினாடிகளில் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை அடைந்ததும், ‘சந்திரயான்-2’ விண் கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி சந்திரயான்-2 விண்கலத்தை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. அதையடுத்து, பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையம், விண்கலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ‘ஈஷா’ யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட்டார். அனைவரும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறினர். விஞ்ஞானிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர் களை ஆரத்தழுவி கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினர் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பார்வையாளர் அரங்கில் இருந்து சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பார்த்து பரவசப்பட்டனர். வானம் நேற்று மேகமூட்டமாக இருந்ததால் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வை சில நொடிகள் மட்டுமே காணமுடிந்தது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

நிலவை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் சந்திரயான்-2 விண்கலம் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் வரும் செப்டம்பர் முதலாவது வாரம் மென்மையான முறையில் தரையிறக்கம் செய்யப்படுகிறது.

பின்னர் இதில் பொருத்தப்பட்டுள்ள விக்ரம் என்ற லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவர் கருவிகள் ஆய்வு பணிகளை தொடங்கும். நிலவுக்கு செல்லவும் மற்றும் நிலவின் சுற்றுப்பாதையில் விண்கலத்தை அனுப்புவதுமான சவாலான பணி இதுவாகும்.

சந்திரயான்-2 கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது பொருத்தமில்லாத வானிலை ஏற்பட்டதால் ஏவுதல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய உயரத்தை இந்தியா எட்டும் திட்டமாக இந்த திட்டம் மாறும்.

லேண்டர் மற்றும் ரோவரின் ஆய்வுப்பணி சில நாட்களில் முடிந்து விடும். அதே நேரத்தில் ஆர்பிட்டர் ஓராண்டு வரை பணியை தொடரும். ரோவர், சூரியசக்தி தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, 500 மீட்டர் தூரம் வரை பயணம் செய்து ஆய்வு செய்யும். ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் நேரடியாக பூமியுடன் தொடர்பு கொள்ள முடியும்.

நிலவின் தென்துருவத்தில், கனிமங்கள், ரசாயன கலவை, பவுதிக துகள்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். இதன்மூலம், நிலவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை அறிய முடியும்.

ரோவர் தகவல், படங்கள் மற்றும் தரவை லேண்டருடன் பகிர்ந்து கொள்ளும். அது, இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்ளும். 500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் 120 தொழில் நிறுவனங்கள் இந்த பணிக்கு உதவி செய்தன. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் பேசியதாவது:-

இன்று வரலாற்றில் முக்கியமான நாள். நிலவுக்கான இந்தியாவின் சரித்திர பயணம் தொடங்கும் நாள். சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட்டமிட்ட உயரத்தை விட இன்று 6 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் கூடுதலாக கொண்டு சென்றுள்ளது. நாளை இஸ்ரோ குழுவினர் செய்ய வேண்டிய வேலையை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்றே செய்துள்ளது.

கடந்த 15-ந் தேதி ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 36 மணி நேரத்தில் கண்டறியப்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டு ராக்கெட் ஏவும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு கடந்த ஒரு வாரம் தூங்காமல் அனைவரும் வேலை செய்துள்ளோம். முன்பு அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளின் செயல்பாட்டை விட தற்போது ஏவப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 15 சதவீதம் கூடுதல் செயல்பாடுடன் உள்ளது.

மேலும், ஒரே திட்டத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று கருவிகளும் நிலவிற்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறை. கடந்த ஒன்றரை வருடமாக செயற்கைகோள் குழு மிகக்கடினமாக உழைத்து சந்திரயான்-2 வை வடிவமைத்துள்ளது. அடுத்த ஒன்றரை மாதத்தில் 15 மிகக்கடினமான கட்டங்களை தாண்டி சந்திரயான்-2 நிலவிற்கு கொண்டுசெல்லப்படும்.

லேண்டர், ரோவர் நிலவில் தரை இறங்கும் கடைசி 15 நிமிடம் திகிலான நேரமாக இருக்கும். இந்திய தேசிய கொடி விண்வெளி துறையில் உயரத்தில் பறக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இமாலய சாதனை

நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரை இறக்கி, ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே சாதனை படைத்துள்ளன. இந்த பட்டியலில் 4-வது நாடாக இந்தியா இடம்பெற உள்ளது.

ஆனால், நிலவின் தென்துருவத்தில் எந்த நாடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டது இல்லை. அந்த வகையில், நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்ய உள்ள முதலாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற உள்ளது. இத்தகைய இமாலய சாதனையை ‘இஸ்ரோ’ படைத்துள்ளது.

அடுத்தது, சூரியனுக்கு

சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பியதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் பாதியில் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்தை ‘இஸ்ரோ’ செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘ஆதித்யா-எல்1’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரியனை சுற்றி உள்ள ஒளிவட்டத்தை ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.

“சூரியனை சுற்றி உள்ள ஒளிவட்டம், எப்படி இந்த அளவுக்கு அதிக வெப்பநிலையை அடைகிறது என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது” என்று இஸ்ரோ தனது இணையதளத்தில் இத்திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரோ தலைவர் கே.சிவன் கடந்த மாதம் அளித்த பேட்டி ஒன்றில், இந்த திட்டம் பற்றி விவரித்தார். “பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் சூரியன் இருக்கிறது. பருவநிலை மாறுபாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒளிவட்டம் பற்றி ஆய்வு நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.

உலகம் எப்போது தோன்றியது?

பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தலைமை நிலையத்தில் இறுதிக்கட்ட சோதனை செய்யப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில், சந்திரயான்-1 திட்டத்தை விட பல்வேறு நவீன கருவிகள் பொருத்தப்பட்டு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. 3.8 டன் எடையுள்ள சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்) மற்றும் ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

நிலவின் மேற்பரப்பு வரைபடம், தாதுக்கள், வேதியியல் கலவை, நிலவின் மேற்பரப்புக்கு மேலே உள்ள சிதறிய நீர் மூலக்கூறுகள் மற்றும் பாறை வடிவங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள ரோவர் வகை வாகனத்தை, இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலவின் தென் துருவத்தை நோக்கமாக கொண்டு அதன் அருகில் முதன் முதலில் தரையிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாறைகள் உள்ளன. இவற்றை எந்த நாடும் இதுவரை ஆய்வு செய்ததில்லை. இதனை ஆய்வு செய்வதன் மூலம் உலகம் எப்போது தோன்றியது என்பது போன்ற தகவல்கள் தெரியவரும். மேலும் கனிம மற்றும் நீர் எதிர்பார்ப்பு சோதனைகளையும் சந்திரயான்-2 விண்கலம் மேற்கொள்ள இருக்கிறது.

பெண்கள் தலைமையில் முதல் மிஷன்

சந்திரயான்-2 விண்கலத்துக்கு திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி எம்.வனிதா மற்றும் பணி இயக்குனராக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த விஞ்ஞானி ரிது கரிதால் ஆகிய இரு பெண்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். 2 பெண்கள் தலைமையில் சந்திரயான்-2 திட்டம் வழிநடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். அவர்கள் தங்கள் சொந்த திறமையால் இந்த அளவிற்கு உயர்ந்து உள்ளனர்.

குறிப்பாக மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட போது துணை நடவடிக்கை இயக்குனராக விஞ்ஞானி ரிது கரிதால் திறமையாக பணியாற்றி வெற்றி தேடி கொடுத்துள்ளார். அதேபோல் விஞ்ஞானி வனிதாவின் சாதனை, சிக்கலைத் தீர்க்கும் திறன்கள் மற்றும் அணியை கையாளுதலில் திறமையானவர்.

சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2-ன் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை இதுபற்றி கூறுகையில், திறமையான குணாதிசயம் இவர்களுக்கு உள்ளது. ஆரம்பத்தில் தயக்கம் இருந்தபோதிலும், சந்திரயான்-2 என்ற பிரமாண்டமான பணியைக் கையாள இயக்குனர்களாக 2 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.

13 பேலோடுகள்

சந்திரயான்-2 மொத்தம் 13 பேலோடுகளைச் சுமக்கும். இதில் ஆர்பிட்டரில் எட்டு, லேண்டரில் மூன்று, ரோவரில் இரண்டு உள்ளன. நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்கியபின் ரோவர் லேண்டரிலிருந்து வெளியேறும் போது ஆர்பிட்டர் தனது பணியைத் தொடரும்.

இது மிகவும் மெதுவான செயல்பாடு ஆகும். அதைத் தொடர்ந்து, ரோவர் நிலவுக்கு நகரும். இது வினாடிக்கு 1 சென்டி மீட்டர் வேகத்தில் நகரும். தொடர்ந்து 500 மீட்டர் தூரம் வரை செல்லும். நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பது ஒரு பெரிய விஷயம்.

அங்கு வெப்பமானது 156 டிகிரியாகும். இந்த இடங்களில் 10 ஆயிரம் டன் முதல் 100 மில்லியன் டன் வரை மாறுபடும் பனியும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

சந்திரயான்-2-க்கு தமிழகத்தின் பங்கு மகத்தானது

நிலவின் மேற்பரப்பில் ‘அனார்தசைட்’ என்ற ஒரு வகை மண் துகள்கள் இருப்பதாக சந்திரயான்-1 விண்கலத்தின் ஆய்வு மூலம் தெரியவந்தது. தற்போது சந்திரயான்-2 திட்டத்துக்காக தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி, குன்னமலை கிராமத்தில் இருந்து ‘அனார்தசைட்’ மண் துகள்கள் 50 டன் தோண்டி எடுத்து பெரியார் பல்கலைக்கழகம் இஸ்ரோவிடம் வழங்கியது.

இதன் மூலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் மண் மாதிரிகளைக் கொண்டு சிறப்பு ஆய்வகம் உருவாக்கப்பட்டு சந்திரயான்-2 நிலவின் பரப்பில் பத்திரமாக இறங்குவதையும், லேண்டர், ரோவர் ஆகியவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கி சோதித்துப்பார்த்து உள்ளனர். அத்துடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் என்ஜின் தயாரிப்புக்கு தேவைப்படும் ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ சுருள்கள் சேலம் உருக்காலையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளன.

அத்துடன் இஸ்ரோ தலைவர் கே.சிவன், சந்திரயான்-2 விண்கலத்தின் திட்ட இயக்குனர் வனிதா முத்தையா ஆகிய இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆக சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதற்கு தமிழகத்தின் பங்கு மகத்தானது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.