Home » இந்தியா செய்திகள் » இந்திய-சீன வீரர்கள் மோதல் வீடியோ உண்மையானது அல்ல’ – ராணுவம் மறுப்பு
image 13

இந்திய-சீன வீரர்கள் மோதல் வீடியோ உண்மையானது அல்ல’ – ராணுவம் மறுப்பு

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே லடாக்கில் எல்லை பகுதியில் சீன வீரர்கள் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபடுவது நடந்து வருகிறது. அங்குள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் இதேபோல் சீன வீரர்கள் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது.

லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவமும் தனது படைகளை குவித்து வருகிறது.

இதனால் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் தூதரக ரீதியில் சமரச முயற்சி மேற்கொண்டு உள்ளன.

இந்த நிலையில், லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ எந்த தேதியில் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் எதுவும் இல்லை. ஆனால் இந்த வீடியோ உண்மையானது அல்ல என்று இந்திய ராணுவம் மறுத்து இருக்கிறது.

இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. வடக்கு எல்லையில் உள்ள சூழ்நிலையை தொடர்புபடுத்தி உள்நோக்கத்துடன் அந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. எனவே அந்த வீடியோ உண்மையானது அல்ல என்று ராணுவம் நிராகரிக்கிறது.

நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக பெரிதுபடுத்த நடக்கும் முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த வீடியோ, எல்லையில் தற்போது உள்ள சூழ்நிலையை திசை திருப்பும் வாய்ப்பு இருப்பதால் அதை ஒளிபரப்ப வேண்டாம் என்று காட்சி ஊடகங்களை கேட்டுக்கொள்கிறோம்.

இரு தரப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி தீர்வுகாண ராணுவ தளபதிகள் பேச்சுவார்தை நடத்தி வருகிறார்கள். தற்போது அங்கு மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.