Templates by BIGtheme NET
Junior-World-Cup-cricket-tournament-starts-tomorrow

இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்

வாங்கரே,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் 2-வது உலக கோப்பை மட்டும் 10 ஆண்டு இடைவெளியில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நியூசிலாந்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி பிப்ரவரி 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் கென்யா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ‘சி’ பிரிவில் வங்காளதேசம், கனடா, இங்கிலாந்து, நமிபியா, ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

தங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், அபாரமான ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்க்கவும் இளம் வீரர்களுக்கு இந்த உலக கோப்பை பொன்னான வாய்ப்பாகும்.

சர்வதேச அளவில் ஒரு ‘ரவுண்ட்’ வலம் வந்த ஜெயசூர்யா, பிரையன் லாரா, இன்ஜமாம் உல்ஹக், நாசர் உசேன், ஷேவாக், கிரேமி சுமித் மற்றும் தற்போது சாதித்துக் கொண்டிருக்கும் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, புஜாரா, கிறிஸ் கெய்ல், அலஸ்டயர் குக், இயான் மோர்கன், டிம் சவுதி, வெரோன் பிலாண்டர், மிட்செல் மார்ஷ், பென் ஸ்டோக்ஸ், கனே வில்லியம்சன் உள்ளிட்ட பிரபலங்கள் ஜூனியர் உலக கோப்பையில் விளையாடியவர்கள் தான். 2008-ம் ஆண்டு இந்திய ஜூனியர் அணி வாகை சூடிய போது விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்பு இந்தியாவின் ஷிகர் தவானின் (2004-ம் ஆண்டில் 505 ரன்) வசம் இருக்கிறது.

தற்போதைய இந்திய ஜூனியர் அணி மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா தலைமையில் களம் இறங்குகிறது. முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பது நமது அணிக்கு கூடுதல் பலமாகும். தனது 45-வது பிறந்த நாளை ஜூனியர் வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடிய ராகுல் டிராவிட், இளம் படையை உற்சாகப்படுத்தும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘19 வயதுக்குட்பட்ட இந்திய அணியினர் தங்களது திறமையை வெளிக்காட்ட ஆர்வமாக இருக்கிறார்கள். போட்டியை நீங்கள் (ரசிகர்கள்) நிச்சயம் பார்ப்பீர்கள். அதே போல் எல்லா வகையிலும் ஆதரவாக இருப்பீர்கள் என்பதையும் அறிவோம்’ என்று கூறியுள்ளார்.

மூன்று முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை மறுதினம் ஆஸ்திரேலியாவை (இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி) எதிர்கொள்கிறது. 16-ந்தேதி பப்புவா நியூ கினியாவையும் (காலை 6.30 மணி), 19-ந்தேதி ஜிம்பாப்வேயுடனும் (காலை 6.30 மணி) மோதுகிறது.

மொத்தம் 7 மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. முதல் நாளில் 4 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா- ஜிம்பாப்வே, வங்காளதேசம்-நமிபியா, நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. முதல் 3 ஆட்டங்கள் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கும், கடைசி ஆட்டம் அதிகாலை 5.30 மணிக்கும் ஆரம்பிக்கிறது. முக்கியமான ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.