Templates by BIGtheme NET
It-is-true-that-there-is-successor-of-political-in-India

இந்தியாவில் வாரிசு அரசியல் இருப்பது உண்மைதான்: ராகுல்காந்தி

வாஷிங்டன்:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 2 வார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அவர் கலிபோர்னியாவின் பிரபல பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ‘இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

அப்போது அவரிடம், காங்கிரஸ் தலைவராக உங்களை தேர்ந்தெடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்று மாணவர்கள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, கட்சி மேலிடம் அப்படி கேட்டுக்கொண்டால் நிச்சயம் அதற்கு தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் வாரிசு அரசியல் இணைந்து காணப்படுகிறதே? என்ற மற்றொரு கேள்விக்கு அவர், “பெரும்பாலான கட்சிகளில் அதுபோல் இருப்பது உண்மைதான். அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின் போன்றோர் தலைவர்களாக உள்ளனர். சினிமா துறையில் அபிஷேக்பச்சன் இருக்கிறார். இதுபோல் தொழில்துறை உள்பட எல்லாத் துறைகளிலுமே வாரிசுகள் உள்ளனர். இது சகஜமான ஒன்றுதான். காங்கிரசில் பெரிய அளவில் வாரிசு அரசியல் இல்லை. என்னைப் பொறுத்தவரை அரசியல் தலைவர்களின் வாரிசு என்று பார்ப்பதை விட உண்மையிலேயே அவர்களுக்கு திறமை இருக்கிறதா? அரசியலில் உணர்வு பூர்வமாக அவர்கள் ஈடுபடுகிறார்களா? என்பதைத்தான் பார்க்கவேண்டும்” என்றார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடியை அவர் கடுமையாக விமர்சித்தார்.

ராகுல்காந்தி கூறியதாவது:-

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பண மதிப்பு நீக்க முடிவை மோடி எடுத்தார். ஆனால், இது தொடர்பாக தலைமை பொருளாதார ஆலோசகரையோ, பாராளுமன்றத்தையோ கலந்து ஆலோசிக்கவில்லை. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

இந்தியாவின் நிறுவன ரீதியான அறிவாற்றலை புறக்கணித்துவிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் பொறுப்பற்றது, மிகவும் ஆபத்தானது. ஒரு நாளில் இந்தியாவில் 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டு வந்தது. ஆனால் பண மதிப்பு நீக்கத்திற்கு பின்பு இது 500 ஆக குறைந்துபோனது.

பொருளாதார வீழ்ச்சி காரணமாக இந்தியாவில் கொந்தளிப்பான நிலை உருவாகி உள்ளது. பண மதிப்பு நீக்கம், அவசர அவசரமாக ஜி.எஸ்.டி.யை அறிமுகம் செய்தது போன்ற பொருளாதார சீர்திருத்தங்களால் நாட்டுக்கு கடுமையான சேதம்தான் ஏற்பட்டு இருக்கிறது.

பண மதிப்பு நீக்கத்தால் பல லட்சம் சிறு தொழில்கள் முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது. விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலைக்கும் தள்ளப்பட்டனர். பண மதிப்பை நீக்கியதால் நாட்டின் வளர்ச்சி விகிதம் 2 சதவீதம் குறைந்துவிட்டது. தற்போதைய வளர்ச்சி விகித்ததால் நாடு முன்னேற்றம் காணாது. வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியாது.

பிளவு படுத்தும் அரசியல் நாட்டில் அதிகரித்து வருகிறது. சுதந்திரமாக செயல்படும் பத்திரிகையாளர்கள் சுடப்படுகின்றனர். தலித் என்பதற்காக அவர்கள் தாக்கி கொலை செய்யப்படுகின்றனர். மாட்டிறைச்சி சாப்பிட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தால் முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். இதுதான் புதிய இந்தியா. இது இந்தியாவை பெரிதும் பாதிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடியின் திட்டங்களில் உங்களுக்கு பிடித்தது? என்று மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்தியாவில் தயாரிப்போம், தூய்மை பாரதம் ஆகியவற்றை ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

பிரதமராக மோடி எவ்வாறு செயல்படுகிறார்? என்ற இன்னொரு கேள்விக்கு, பா.ஜனதா எம்.பி.க்கள் என்னிடம், நாங்கள் சொல்வதை பிரதமர் காது கொடுத்து கேட்பதில்லை என்று குறைபடுகிறார்கள். எனவே அவர்(மோடி) முதலில் தன்னுடன் பணியாற்றுபவர்களுடன் நன்கு பேசவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.