Templates by BIGtheme NET
Plot-to-kill-British-premier-May-foiled

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த சதி முறியடிப்பு 2 பேர் கைது

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் பிரதமராகவும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பதவி வகிப்பவர் தெரசா மே (வயது 61).

இவர் லண்டனில் எண்.10, டவுனிங் வீதியில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியிருந்து வருகிறார்.

இந்த இல்லத்தில் மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடித்து தெரசா மேயை கொல்வதற்கு பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.

ஆனால் இந்த சதியை போலீசார் வெற்றிகரமாக முறியடித்து விட்டனர்.

மந்திரிசபை கூட்டத்தில் தகவல்

லண்டனில் நேற்று முன்தினம் தெரசா மே தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இங்கிலாந்து பாதுகாப்பு அமைப்பு எம் 15-ன் தலைவர் ஆண்ட்ரூ பார்க்கர், இந்த தகவலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த ஆண்டு மட்டும் இங்கிலாந்தில் 9 பயங்கரவாத தாக்குதல்களை பாதுகாப்பு அமைப்பினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மந்திரிசபை கூட்டத்தில் பேசும்போது, “சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். ஆனால் அவர்கள் இங்கிலாந்து நாட்டில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவதற்கு சதி செய்து வருகின்றனர். அவர்கள் யாரை தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்த நினைக்கிறார்களோ, அவர்களுடன் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தொடர்பு கொள்கிறார்கள். இது அதிகரித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

நன்றி தெரிவித்தார்

மந்திரிசபை கூட்டத்தை தொடர்ந்து பிரதமர் தெரசா மேயின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “இங்கிலாந்தில் இதுவரை இல்லாத வகையில் பயங்கரவாதிகளின் சதித்திட்டங்களை முறியடித்துள்ள எம்-15 படையினரின் ஓய்வு ஒழிச்சல் இல்லாத உழைப்புக்கு பிரதமர் தனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொண்டார்” என்று குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகள் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் தெரசா மேயின் டவுனிங் வீதி மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோர்ட்டில் ஆஜர்

பிரதமர் தெரசா மேயை குண்டுவைத்து கொல்ல முயற்சித்தவர்கள் என்ற சதி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர்கள், வடக்கு லண்டனை சேர்ந்த ஜகரியா ரகுமான் (20), பர்மிங்ஹாமை சேர்ந்த முகமது அகீப் இம்ரான் (21) ஆவார்கள்.

இவர்கள் இருவரும் அங்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இங்கிலாந்து நாடு தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ஆளாகி வருகிற நிலையில், நாட்டின் பிரதமர் வீட்டுக்கே குண்டு வைத்து, அவரை கொல்ல பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி, அது முறியடிக்கப்பட்டுள்ளது என்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நடந்த தாக்குதல்

இங்கிலாந்து நாட்டில் 1991-ம் ஆண்டு ஜான் மேஜர் பிரதமராக இருந்தபோது, லண்டனில் எண்.10, டவுனிங் வீதியில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது ஐரிஷ் குடியரசு ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியதும், அதில் ஜான் மேஜர் தப்பிவிட்டதும் நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*