Templates by BIGtheme NET
Ashes-2nd-Test-against-EnglandThe-Australian-team-is-a

இங்கிலாந்துக்கு எதிரான ஆ‌ஷஸ் 2–வது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

அடிலெய்டு,

இங்கிலாந்துக்கு எதிரான ஆ‌ஷஸ் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்
ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்–இரவு) அடிலெய்டில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 227 ரன்னில் ஆல்–அவுட் ஆனது.

இங்கிலாந்து அணி ‘பாலோ–ஆன்’ ஆனாலும், ஆஸ்திரேலிய அணி பாலோ–ஆன் கொடுக்காமல் 2–வது இன்னிங்சை ஆடியது. 215 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய 138 ரன்னில் சுருண்டது.

அபார பந்து வீச்சு
பின்னர் 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4–வது நாள் ஆட்டம் முடிவில் 62 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் ஜோரூட் 67 ரன்னுடனும், கிறிஸ்வோக்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

நேற்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்பதால் ஆட்டம் பரபரப்புடன் தொடங்கியது. ஆனால் ஆஸ்திரேலிய அணியினர் அபாரமாக பந்து வீசி இங்கிலாந்து அணியை நிலைகுலைய செய்தனர். ஜோரூட், கிறிஸ்வோக்ஸ் ஆகியோர் முந்தைய நாளைய ஸ்கோருடன் ஹேசில்வுட் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். அத்துடன் இங்கிலாந்து அணியின் நம்பிக்கையும் கரைந்து போனது.

ஆஸ்திரேலியா அபார வெற்றி
அடுத்து களம் கண்ட மொயீன் அலி 2 ரன்னிலும், கிரேக் ஓவர்டான் 7 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 8 ரன்னிலும் அடுத்தடுத்து விரைவில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். சற்று தாக்குப்பிடித்து நின்ற விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ (36 ரன்கள்) கடைசி விக்கெட்டாக மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் வீழ்ந்தார்.

இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 84.2 ஓவர்களில் 233 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் நின்றார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், ஹேசில்வுட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலிய அணி இதுவரை ஆடியுள்ள 4 பகல்–இரவு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆட்டம்
இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் வருகிற 14–ந் தேதி தொடங்குகிறது.

தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட் கருத்து தெரிவிக்கையில், ‘இங்கிலாந்து அணி மற்றொரு ஒயிட்வாஷ்சை நோக்கி நகருகிறது என்று சொல்வதை உறுதியாக நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். 2–வது இன்னிங்சில் நாங்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டோம். இந்த போட்டி தொடரில் இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. எங்களுடைய திறமைக்கு ஏற்ப சரியான முறையில் நீண்ட நேரம் சிறப்பாக விளையாடினால் வெற்றி பெற முடியும்’ என்றார்.

தூக்க மாத்திரை தேவைப்பட்டது
வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில், ‘4–வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு கடைசி நாள் ஆட்டம் எப்படி இருக்குமோ? என்று நினைத்து அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. இதனால் நான் தூக்க மாத்திரை எடுத்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரம் எனக்கு மிகவும் கடினமாக அமைந்தது. இங்கிலாந்து அணிக்கு பாலோ–ஆன் கொடுக்காமல் எடுத்த முடிவில் தவறு செய்து விட்டேனோ? என்று சிந்தித்தேன். ஒரு நாட்டு அணியின் கேப்டனாக இருக்கையில் இதுபோன்ற பிரச்சினை எல்லாம் ஒரு அங்கம் தான். கடினமாக முடிவுகளை எடுக்க வேண்டியது வரும். சில வேளைகளில் தவறான முடிவுகளை எடுப்பதும் நடக்கும். இந்த டெஸ்ட் போட்டியில் முதல் 2 நாட்கள் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். அடுத்து இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிப்பாதைக்கு திரும்பியது. எனவே நான் உண்மையிலேயே பதற்றம் அடைந்தேன். ஜோரூட் அபாயகரமான வீரர். அவர் நிலைத்து நின்று ஆடி இருந்தால் எங்களுக்கு நிறைய கஷ்டங்களை கொடுத்து இருப்பார். அதிர்ஷ்டவசமாக அவரை வீழ்த்தினோம். எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கருதி தான் பாலோ–ஆன் கொடுக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*