Home » விளையாட்டுச்செய்திகள் » ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி – ஷரபோவாவும் வெளியேற்றம்
Australian-Open-Tennis-Federer-shock-defeat--Sharabova

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி – ஷரபோவாவும் வெளியேற்றம்

மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் பிரிவில் 3-ம் நிலை வீரரும், 6 முறை சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 15-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் (கிரீஸ்) மோதினார். இதில் இருவரும் தங்களது சர்வீஸ்களை புள்ளியாக மாற்றுவதில் மட்டும் அதிக கவனம் செலுத்தியதால் நீயா-நானா? என்று கடுமையான போட்டி நிலவியது. முதல் செட்டை ‘டைபிரேக்கர்’ வரை போராடி வசப்படுத்திய பெடரர், அடுத்த 3 செட்டுகளில் கோட்டை விட்டார். எதிராளியின் ஒரு சர்வீசை கூட 37 வயதான பெடரரால் ‘பிரேக்’ செய்ய முடியவில்லை.

3 மணி 45 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 20 வயதான சிட்சிபாஸ் 6-7 (11-13), 7-6 (7-3), 7-5, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் பெடரருக்கு அதிர்ச்சி அளித்தார். மணிக்கு அதிகபட்சமாக 213 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய சிட்சிபாஸ், 20 ‘ஏஸ்’களும் வீசி அசத்தினார். கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் சிட்சிபாஸ் கால்இறுதிக்குள் அடியெடுத்து வைப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் கிராண்ட்ஸ்லாமில் கால்இறுதிக்கு வந்த முதல் கிரீஸ் நாட்டவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். “இந்த உலகில் இப்போது மகிழ்ச்சியான மனிதராக நானாகத் தான் இருப்பேன். மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை” என்று கூறி சிட்சிபாஸ் உணர்ச்சி வசப்பட்டார்.

சிட்சிபாஸ், அடுத்து 23-ம் நிலை வீரரான ராபர்ட்டா பாவ்டிஸ்டா அகுத்தை (ஸ்பெயின்) எதிர்கொள்கிறார். முன்னதாக பாவ்டிஸ்டிடா அகுத், தனது 4-வது தடையை கடக்க 5 செட் வரை அதுவும் 3 மணி 58 நிமிடங்கள் மல்லுகட்ட வேண்டி இருந்தது. 7-ம் நிலை வீரர் மரின் சிலிச்சை (குரோஷியா) சந்தித்த பாவ்டிஸ்டா அகுத் 6-7 (6-8), 6-3, 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டார். பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு தானாக செய்யக்கூடிய தவறுகளை சிலிச் அதிகமாக செய்ததால் (73 முறை) தோல்வியை தவிர்க்க முடியாமல் போய் விட்டது.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), 6-0, 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் தாமஸ் பெர்டிச்சை (செக்குடியரசு) விரட்டியடித்து, 11-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

வளர்ந்து வரும் நட்சத்திரமான அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ, பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார். திரிலிங்கான இந்த ஆட்டத்தில் டியாபோ 7-5, 7-6 (8-6), 6-7 (1-7), 7-5 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவை தோற்கடித்து, கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள டியோபோவுக்கு நேற்று 21-வது பிறந்த நாளாகும். பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி அவருக்கு அமைந்தது. டியாபோ கால்இறுதியில் நடாலுடன் மோத உள்ளார். நடாலை அவர் நேருக்கு நேர் எதிர்கொள்ள இருப்பது இதுவே முதல் முறையாகும்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி, முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை மரிய ஷரபோவாவுடன் (ரஷியா) கோதாவில் இறங்கினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களத்தில் ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டிய ஆஷ்லே பார்ட்டி 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் 2008-ம் ஆண்டு சாம்பியனான ஷரபோவாவை வெளியேற்றினார்.

2012-ம் ஆண்டில் இருந்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி வரும் ஆஷ்லே பார்ட்டி, முதல்முறையாக கால்இறுதி சுற்றை அடைந்து இருக்கிறார். மேலும் 2009-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதியை எட்டிய முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றார். நடப்பு தொடரில் களத்தில் நீடிக்கும் ஒரே ஆஸ்திரேலிய நாட்டவரான ஆஷ்லே பார்ட்டி அடுத்து செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவுடன் மோதுகிறார். கிவிடோவா தனது 4-வது சுற்றில் 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 17 வயது மங்கை அமெரிக்காவின் அனிசிமோவாவை ஊதித்தள்ளினார்.

விம்பிள்டன் சாம்பியனும், 2-ம் நிலை நட்சத்திரமும் ஆன ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை 6-0, 6-2 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் டேனியலி காலின்ஸ் பந்தாடினார். வெறும் 56 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த தரவரிசையில் 35-வது இடம் வகிக்கும் டேனியலி காலின்ஸ், கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக கால்இறுதிக்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இன்னொரு ஆட்டத்தில் ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா 6-7 (3-7), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்சை (அமெரிக்கா) வீழ்த்தினார்.