Templates by BIGtheme NET

அரிசி, கோதுமை, பால், தயிருக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு

அரிசி, கோதுமை, பால் மற்றும் தயிருக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிப்பது என்று அருண் ஜெட்லி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஸ்ரீநகர்,

அரிசி, கோதுமை, பால் மற்றும் தயிருக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிப்பது என்று அருண் ஜெட்லி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

நாடு முழுவதும் அனைத்து மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை 1-ந் தேதி, இந்த வரி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருட்களுக்கு ஏற்றாற்போல், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 விகிதங்களில் ஜி.எஸ்.டி. வரியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்த பொருட்களை எந்த சதவீதத்தில் சேர்ப்பது என்று தீர்மானிக்கப்படாமல் இருந்தது.

அதற்காக, மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று தொடங்கியது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மொத்தம் உள்ள 1,211 பொருட்களில், 1,205 பொருட்களுக்கான வரி விகிதம் முடிவு செய்யப்பட்டது. எந்தெந்த பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பது என்றும் இறுதி செய்யப்பட்டது.

அரிசி, பால்

அதன்படி, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கும், பால், தயிர் போன்ற அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால், அப்பொருட்களின் விலை குறையும்.

சர்க்கரை, தேயிலை, காபி (இன்ஸ்டன்ட் காபி தவிர), சமையல் எண்ணெய் போன்ற அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கு குறைந்தபட்ச வரியான 5 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மருந்துகள், இனிப்பு, நிலக்கரி ஆகியவற்றுக்கும் 5 சதவீத வரி விதிக்கப்படும்.

சோப்பு, பற்பசை

ஹேர் ஆயில், சோப்பு, பற்பசை போன்ற பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும். செயற்கை குளிர்பானங்கள், கார்கள், ஏ.சி., பிரிட்ஜ் ஆகியவற்றுக்கு அதிகபட்ச வரியான 28 சதவீத வரி விதிக்கப்படும். கார்கள் மீது கூடுதல் வரியும் விதிக்கப்படும். சிறிய கார்கள் மீது ஒரு சதவீதமும், நடுத்தர கார்கள் மீது 3 சதவீதமும், சொகுசு கார்கள் மீது 15 சதவீதமும் கூடுதல் வரியாக விதிக்கப்படும்.

தங்கம், காலணி, பிராண்டட் பொருட்கள், பீடி, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பல்வேறு சேவைகள் ஆகியவற்றுக்கான வரி விகிதம் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

பணவீக்கம் உயராது

இந்த முடிவுகள் குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

81 சதவீத பொருட்கள், 18 சதவீத வரிக்கு கீழேதான் உள்ளன. ஒவ்வொரு பொருளுக்கும் தற்போது உள்ள வரி சதவீதத்தை விட ஜி.எஸ்.டி. வரி சதவீதம் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், பொருட்களின் விலை குறையும். இது, பணவீக்கத்துக்கு வழிவகுக்காது. வரி ஏய்ப்பு குறைவதுடன், வரி வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*