Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » அதிநவீன கருவிகள் உதவியுடன் குமரியில் மறு நில அளவை பணிகள் தொடக்கம் : பணிகள் முடிய ஓராண்டுக்கு மேல் ஆகும்
Functional-startups-in-Kumari-with-the-help-of-sophisticated-tools-Start-up:-Tasks-can-last-for-over-a-year

அதிநவீன கருவிகள் உதவியுடன் குமரியில் மறு நில அளவை பணிகள் தொடக்கம் : பணிகள் முடிய ஓராண்டுக்கு மேல் ஆகும்

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் முழுவதும் மறுநில அளவை பணிகள் தொடங்கியுள்ளன. அதிநவீன கருவிகள் உதவியுடன் நடைபெறும் இந்த பணிகள் நிறைவு பெற ஓராண்டுக்கு மேல் ஆகும். நில அளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக, நில அளவைப் பணிகளில் சங்கிலி, நேர்க்கோணக்கட்டை மற்றும் கோணமானி போன்ற பழைய கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, டிபரன்ஷியல் குளோபல் பொஷிசனிங் சிஸ்டம் (டிஜிபிஎஸ்)- ரியல் டைம் கைன்மேட்டிக்ஸ் (ஆர்டிகே) என்ற நவீன நில அளவைக் கருவிகளைக் கொண்டு மறு நில அளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. உலக அளவில் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில், தமிழகத்தில்தான் நிலத்தை நவீன நில அளவைக் கருவிகளை கொண்டு நில அளவை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகாவில் இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. நவீன நில அளவை கருவி மூலம் நில அளவை பணிகள் மேற்கொள்ளும்போது துல்லியமாக கணக்கிடப்படும்.

இப்பணிகளில் எந்த தவறும் நடைபெற சாத்தியமில்லை என்ற அடிப்படையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. நிலஅளவைப் பணிகள் மேற்கொள்ளும் போது சென்னை தலைமையிடத்திலிருந்து நேரடியாக கண்காணிக்க முடியும். தமிழகத்தில் கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் இந்த நவீனமுறையில் மறு அளவை பணிகள் நடைபெற தொடங்கியுள்ளது. நில அளவை துறையின் 2 ஆய்வாளர்கள், 28 துணை ஆய்வாளர்கள் என்று 30 பேர் இணைந்து குமரிமாவட்டத்தில் இந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நில அளவைதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குமரி மாவட்டம் முழுவதும் மறு அளவை செய்யப்பட வேண்டியுள்ளது. மாவட்டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் தவிர்த்து வருவாய்துறையின் பதிவேடுகளில் உள்ள நிலப்பகுதிகள் முழுவதும் அளவீடு செய்யப்படும். இந்த பணிகள் ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்னர் துவங்கியுள்ளோம். முதல் கட்டமாக மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள 36 வருவாய் கிராமங்களில் முதல்கட்டமாக பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலத்தின் அமைவிடம் எல்லை பகுதிகள் போன்றவை இந்த பூர்வாங்க பணிகளின்போது மேற்கொள்ளப்பட்டது. தற்போது தேரேகால்புதூர் பகுதியில் நில அளவை தொடங்கியுள்ளோம். பணிகள் முடிய முடிய கற்கள் போடும் பணியும் தொடங்கப்படும். இப்பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று உறுதியாக கூற இயலாது. ஒரு ஆண்டுக்கு மேல் வரை ஆகலாம்’ என்றார்.